அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒப்படைக்கும் போராட்டமானது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி, ஜோசப் ஸ்டாலின், கருப்புச்சாமி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன உரையின் போது மாவட்ட செயலாளர் பகத்சிங் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் ஒன்றரை ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உதவித்தொகை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர் . அது மட்டும் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரே வேலையான நூறு நாள் வேலை திட்டமும் வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டுகளை கொண்டு 35 கிலோ இலவச அரிசி ஆவது பெற்று வாழலாம் என எதிர்பார்த்தால் தமிழக அரசு ஏஏஓய் கார்டாக இன்று வரை மாற்றப்படவில்லை.
மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்க இருக்கிறோம் என்று கூறி மாற்றுத்திறனாளிகளை அழைத்துக் கொண்டு, நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளை தொட்டிலில் தூக்கிக் கொண்டு வந்து போராட்டம் நடத்தினர்.